Tuesday, September 17, 2013

கிளார்க்'ஸ் டேபிள்




தென் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் கேரள எல்லையில் இருக்கும் கம்பம் தான் எனக்கு பூர்வீகம். தமிழகத்தின் ஒரே பள்ளத் தாக்கு. இயற்கை எழில் சும்மா போட்டுத் தாக்கும்.  

பள்ளிக் கல்வி முழுவதும் அங்கே தான். நல்ல வேலை அந்த நேரத்தில் எங்கள் ஊரில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகமாகவில்லை. அதனால் தான் நமக்கு தமிழும் தெரிகிறது ஆங்கிலமும் நன்றாகவே வருகிறது. பாவம் இன்றைய குழந்தைகள், தமிழ் தெரியாமல் ஆங்கிலம் புரியாமல் ஒரே திண்டாட்டம் தான். ஒரு சில சென்னை பள்ளிகள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளில் இது தான் நிலை. சென்னையிலோ வேறு பிரச்சினை, அவர்களுக்கு தமிழ் டமிலாகி    ததிங்கனத்தோம் போடுகிறது.

சரி என் கதைக்கு வருவோம்......

அப்போது நான் எங்கள் ஊர் ஐஸ்கூலாகிய ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆவெரேஜ் மாணவன். எல்லா புத்தகங்களும் கைடுகளும் ஊரிலேயே கிடைப்பது சற்று சிரமம். சீனியர் மாணவர்கள் தாங்கள் பயன் படுத்திய புத்தகங்களை பாதி விலைக்கு விற்பார்கள். சிலர் அவற்றை வாங்குவதும் உண்டு. படிப்பில் சுட்டியாக இல்லா விட்டாலும் பழைய புத்தங்களை வாங்குவது எனக்கு பிடிக்காது. பழைய புத்தகங்கள் வாங்கிய மாணவர்கள் என்னை விட நல்ல மார்க்குகள் பெறுவார்கள். ஆனாலும் எனக்கு கவலை இருந்ததாக தெரியவில்லை.  

பள்ளிகளும் வணிகமயமாகி  உள்ளேயே கடை போடாத பொற்காலம்  அது. இப்போதோ போறாத காலம்.         

ஒரு நாள் கணித ஆசிரியர் வந்தார் எல்லோரும் கிளார்க்'ஸ் டேபிள் வாங்க வேண்டும் என்றார். இரண்டு நாட்களில் அந்த பாடம் ஆரம்பிக்க போவதாகவும் சொன்னார். அன்று மாலை பாடப் புத்தகங்கள் விற்கும் ஒரே கடையான   கோபால் ஸ்டோர் போனால் அங்கே இல்லை. ஸ்டாக் வர ஒரு வாரம் ஆகும் என்றார் கடை ஓனர்.

புக் இல்லாமல் திங்கள் கிழமை பள்ளிக்கு போனால் வாத்தியார் அடிப்பார். புது  புக்காகவும் இருக்கணும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது என் தந்தை கடை கொள்முதலுக்காக மதுரை போவதாக தெரிய வந்தது. அவரிடம் போய்  "அத்தா மதுரையிலிருந்து எனக்கு ஒன்று வாங்கி வர முடியுமா"   என்றேன்.  "என்ன வேண்டும்?" என்றார் என் அத்தா. எதையுமே கேட்டவுடன் வாங்கி கொடுக்கும் அத்தாவோ கிளார்க்'ஸ் டேபிள் என்றவுடன்  டேபிளெல்லாம் மதுரையில் இருந்து தூக்கிக்கிட்டு அலைய முடியாது. இங்க நடராஜ் ஆசாரிட்ட சொல்லி செஞ்சுக்கரலாம்னு சொல்லிட்டு காலை 8 மணி மதுரை பாஸ்ட் பாசஞ்சரை பிடிக்க வேகமாக ஓடினார்.

பின்பு எப்படியோ ஒரு வழியாக அந்த புத்தகம் என் கைக்கு வந்தது. ஆனாலும் எனக்கு அந்த கிளார்க்'ஸ் டேபிள் ஒன்றுமே புரியவில்லை என்பது வேறு விஷயம்.

பி.கு: கிளார்க்'ஸ் டேபிள் என்பது லாகரித்ம் புக். கணித, இயற்பியல் வகுப்புகளில் இதை ரெஃபர் செய்வார்கள். நவீன சையன்டிபிக் கால்குலேட்டர் வந்து கிளார்க்'ஸ் டேபிளை டைனோசராக்கி விட்டது.

2 comments:

  1. எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். மேலும் தங்களது சுவையான அனுபவங்கள் மிகவும் பயன்பெற வழி மேல் விழி வைத்து காத்துகொண்டு இருக்கின்றோம்

    ReplyDelete
  2. நன்றி நயீம். தொடர்ந்து படியுங்கள். கருத்துங்களை பகிருங்கள்.

    ReplyDelete