பள்ளி இறுதியாண்டு. மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பாட்டனி
& ஜுவாலஜி ஆகிய பாடங்களுடன் தமிழ், ஆங்கில மொழிகள் சேர்ந்தது எங்கள் சிலபஸ்.
என்னோடு ஒன்றாம் வகுப்பில் இருந்து (நாங்கள்லாம் 5 வயசுல தான்
பள்ளிக்கூடமே போக ஆரம்பிச்சோம்) கூடவே படித்து வந்த சில
நண்பர்கள் இங்கேயும் என்னுடன்.
எங்கள் கேங்கில் படிப்பில யாரும் சூப்பரெல்லாம் கிடையாது,
எல்லோருமே சுமார் தான். பெரும்பாலான கேங் நண்பர்களுக்கு குடும்ப தொழில் இருந்தது.
அது நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. அதனால் படிப்பில் பெரிய நாட்டம் கிடையாது. ஏதோ
பள்ளிக்கு போனோம் பொழுது போனது என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது வகுப்புக்கு ஒரு லீடர் தேவைப்பட்டது. எங்கள்
வகுப்பு ஆசிரியர் என்ன நினைத்தாரோ, என்னை லீடராக இருக்க சொல்லிட்டாரு. சாரே
சொன்னதால, சக மாணவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கல. ஒரு மனதாக அந்த பதவி அந்த
ஆண்டு எனக்கு சொந்தமானது.
ஆசிரியர் இல்லாத நேரங்களில் வகுப்பை கன்ட்ரோல் செய்வது,
பள்ளி விழாக்களில் வகுப்பை ரெப்ரசன்ட் செய்வது, +2 ஆனதால் இன்டெர்னல் எக்ஸாம்
நேரங்களில் எக்ஸ்டெர்னல் எக்ஸாமினர்களாக வரும் வெளியூர் ஆசிரியர்களை கவனித்துக்
கொள்வது ஆகியவை வகுப்பு லீடரின் கடமைகளில் அடக்கம்.
ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கிகொண்டிருந்தது. போர்டு
எக்ஸாம் என்பதால் படிப்பாளி மாணவர்கள் பிஸியாயிட்டாய்ங்க. எல்லா பொழுது போக்கு
விஷயங்களையும் ஒதுக்கி விட்டு புக்கும் கையுமாக சீரியஸா இருந்தாய்ங்க. எங்கள் கேங்
மட்டும் எப்போதும் போல் ஜாலியாக.
இன்டெர்னல் எக்ஸாமுக்கு இரண்டு நாட்களுக்கு முன் என்னை
வகுப்பு ஆசிரியர் கூப்பிட்டு, “இந்தா பாருடா நாளைக்கு ஃபிசிக்ஸ் எக்ஸ்டெர்னல்
எக்ஸாமினர் திண்டுக்கல்ல இருந்து வர்றாரு. யுனிவர்சல் லாட்ஜுல ஒரு ரூம் புக்
பண்ணிரு நானும் ஒரு வார்த்தை சொல்லிர்றேன்னு சொன்னார்”. அது போலவே அவரும்
சொல்லிட்டாரு ரூமும் போட்டாச்சு.
மறு நாள் காலையில் திண்டுக்கல்ல இருந்து சார்
வந்திட்டாருன்னு தெரிஞ்சு சைக்கிள எடுத்துக்கிட்டு போய் பாத்தேன். விஷ்
பன்னிணவுடனே வெளங்கிட்டாரு நான் தான் கிளாஸ் லீடர்ன்னு.
ஏதும் ஹெல்ப் வேணுமா சார்னு கேட்டேன். “சாயந்தரம் அப்படியே
வெளியில போலாம்னு பாத்தேன். எனக்கு இந்த ஊர் அவ்வளவா பழக்கம் இல்ல. யாராவது
தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுப்பா”ன்னாரு. ஏன் சார் நானே வர்றேன் சொன்னவுடனே ஜெர்க்
ஆயிட்டாரு. “என்னாப்பா பரிச்சைய வச்சிக்கிட்டு எப்டிப்பா நீ வருவ?”ன்னாரு.
பரவாயில்ல சார், எங்க வாத்தியார் ஒங்கள நல்லா பாத்துக்க சொன்னாருன்னேன். உடனே
குஷியாயிட்டாரு.
வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததை சொன்னேன். அவருக்கு நம்மள
பத்தி நல்லா தெரிஞ்சதால ஒன்னும் சொல்லல. அவர போடி ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்
சாப்பாடு வாங்கி தரச் சொன்னார்.
சாயந்தரம் போனேன். அவரோடு கொஞ்சம் சுற்றி விட்டு சாப்பாடு
வாங்கி கொடுத்தேன். அவர திரும்ப லாட்ஜில விடும் போது, “ரொம்ப ஹெல்ப் பண்ணுனப்பா.
தேங்க்ஸ்”ன்னு சொல்லிட்டு “ஒம் பேரு, நம்பரலாம் எழுதிக் கொடுப்பா”ன்னாரு. சார்
என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு மூணு பேருக்கும் ஹெல்ப் பண்ணுங்க சார் என்றேன்.
சரின்னாரு. லாட்ஜ் ஆஃபிஸில ஒரு பேப்பர் வாங்கி எழுதிக்கொடுத்தேன்.
மறு நாள் எக்ஸாம். ஏதோ டெஸ்ட் கொடுத்தாங்க. ஒன்னுமே வெளங்கல.
பக்கா பக்கான்னு முழிச்சேன். சுத்தி சுத்தி வந்த திண்டுக்கல் வாத்தியார் என்னய
பாத்து சிரிச்சார். எங்க வாத்தியாருட்ட நான் நல்ல படியா கவனிச்சதா சொன்னாரு. என்
பக்கத்தில வந்து “நல்லா செய்ய்யுப்பா”ன்னாரு. எதோ செஞ்சுட்டு கெளம்பி வந்தேன்.
போறதுக்கு முன்னாடி, என்னய கூப்பிட்டு, தம்பி ஒனக்கு ஃபுல்
மார்க்ஸ் போட்டுட்டேன்ப்பா. நீ சொன்ன மத்த மூணு பேருக்குங்கூட 50க்கு
50ப்பா”ன்னாரு. ரொம்ப தேங்க்ஸ் சாருன்னு சொல்லிட்டு வந்தேன். ஒரே சந்தோஷம். நாங்க
நாலு பேரும் ஒன்னும் செய்யாமலேயே ஃபுல் மார்க்ஸ் வாங்கிட்டோம்.
இதே தந்திரத்தை மற்ற பாடங்களிலும் செய்ய முயற்சித்தோம்.
சரியான பலன் கிடைக்கல. பாட்டனி வாத்தியார் மட்டும் எல்லாத்துக்கும் முடியாது
ஒனக்கு மட்டும் 40 மார்க் போடுறேன்னு சொல்லிட்டு போட்டாரு. ஜுவாலஜி வாத்தியார் அறுத்து கூறு போட்டு விடுர
மாதிரி பாத்தாரு. கெமிஸ்ட்ரி சார் ஆசிட் அடிச்சிருவாரோன்னு பயமாப் போச்சு. ஓடி
வந்துட்டேன்.
ஃபிசிக்ஸ் பிராக்டிகல்ஸ்ல சுளையா 50 வாங்கிட்ட்தால தியரி
பேப்பர்ல 150க்கு 20 வாங்கினாலே போதும். ரொம்ப ஈசின்னு நெனெச்சு புக்கையே தொடல.
ஒரே சுத்து தான்.
எக்ஸாமும் நடந்தது. ஏதோ எழுதினோம். இரண்டு மாதங்களில்
ரிசல்ட் வந்தது. எங்களுக்கு ஒரே ஷாக். பாத்தா நான் ஃபிசிக்ஸ்ல தியரில 150க்கு
வெறும் 23 தான். மொத்தம் 200க்கு 73 வாங்கி எப்படியோ ஜஸ்ட் பாஸ் ஆகிட்டேன்.
கெமிஸ்ட்ரி, பாட்டனி, ஜுவாலஜியில கொஞ்சம் கூட மார்க்கு வாங்கியிருந்தேன். வழக்கம்
போல தமிழ், ஆங்கிலத்துல மட்டும் 100க்கு மேல. ஆங்கிலத்துல நான் தான் ஸ்கூல்
செகண்ட்.
இதுல வேடிக்க என்னன்னா ஃபிசிக்ஸ்ல இன்டெர்னல்ல 50 மார்க்
வாங்கின என்னோட குளோஸ் ஃபிரண்ட் தியரி பேப்பர்ல 150க்கு 19 வாங்கி மொத்தம் ஒரு
மார்க்ல ஃபெயிலாயிட்டான். அவனுக்கு சோகம் தாங்கல. ஆனா அவங்க அப்பாவுக்கோ சந்தோசம்
தாங்கல. யாவாரத்துல உதவுறதுக்கு ஆள் கெடைச்சாச்சுன்னு. அந்த நண்பன் தான் இன்னக்கி
எங்க எல்லாரையும் விட பொருளாதாரத்துல நல்லா இருக்கான். ஊரிலேயே பெரிய ரொக்கப்
புள்ளி.
ஒரு வேள நம்மளும் ஃபெயிலாயிருந்தா இன்னும் நல்லா
இருந்திருப்போம் போல!
பாடத்தில ஜஸ்ட் பாஸ் ஆனாலும் , வாழ்க்கையிலே நீ கிராண்ட் பாஸ்தான்னு எங்களுக்கு தெரியுமே
ReplyDeleteசையத் .
நன்றி ஆல்ஃபி. ஆனாலும் உன்னோட அன்பு கொஞ்சம் ஓவர் தான். கிராண்ட் பாஸோ என்னவோ, வாழ்க்கை சந்தோஷமாக போகுது. அதற்கு ஆண்டவனுக்கு நன்றி.
Delete