ஒரு வழியா +2 பாஸ்
ஆயாச்சு. இனி காலேஜ்ல சேரனும். நாம வாங்கின மார்க்குக்கு என்ன மெடிக்கல்,
எஞ்ஜினியரிங் காலேஜிலயா இடம் குடுப்பாய்ங்க? ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ பாத்து
சேரணும்.
ஒன்னாப்புல இருந்து
ஒன்னா படிச்ச க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் மெட்ராஸ் காலேஜஸ்ல சேர்றதுன்னு முடிவு
பண்ணிட்டாய்ங்க. அவய்ங்க வீட்டுலயும் சரின்னு சொல்லிட்டதால அவனுகளுக்கு ஒரே குஷி.
எங்க அப்பாவுக்கு
நான் மெட்ராஸ் போறது சுத்தமா புடிக்கல. ஏன்னா நான் கெட்டு போய்ருவேனாம். நெறய பேருட்ட விசாரிச்சு
மதுரையில அமெரிக்கன் காலேஜ்ல சேக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு. அட்மிஷன்
கிடைக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க.
நான் பள்ளி நாள்ல சுமாரா
வாலிபால் விளையாடுவேன். பள்ளி டீமில் விளையாடியும் இருக்கிறேன். அந்த டைம்ல என் பங்களிப்பு
எதுமில்லாம எங்க டீம் தொடந்து மாவட்ட அளவில மூணு முறை ஜெயிச்சு சுழற்கோப்பை
வாங்கிச்சு. அதுனால எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல கெடைக்கும்னு பிரின்ஸிபல் பெரியப்பா நெனச்சாரு. அவரு ஃப்ரண்ட் மூலமா காலேஜ் பி டி
டைரக்டருக்கு லட்டர் வாங்கி குடுத்தாரு. அவருக்கு
மதுரை எஸ் எஸ் காலனில வீடு
நானும் மறுநாள் காலைல
வெரசா கிளம்பி மதுரை போயி “எனக்கு எஸ் எஸ் காலனி ஏரியா நல்லா தெரியும்”னு சொன்ன
ஒரு பையனோட போனேன்.
காலனிக்கு போய் அவர் பேர சொன்னா போதும்னு ஊர்ல சொல்லி அனுப்புச்சாய்ங்க. உள்ள போன கொஞ்ச தூரத்தில போஸ்ட் ஆஃபிஸ் இருந்துச்சு.
உள்ள போய்
கேக்கலாமுண்ணு நுழைஞ்சப்ப அங்க இருந்து ஏதோ வாங்கிட்டு வெளியே வந்த ஒரு ஆர்வக்கோளாறு ஆளு வாண்டடா வந்து
“இந்த ஏரியா இப்பத்தாப்பா டெவலப் ஆயிட்டிருக்கு. நீங்க போய் எதுத்த தெருல
இருக்க பலசரக்கு கடையில கேளுங்க. இங்க இருக்க எல்லாரோட வெவரங்களும் அவங்கள்ட்ட
இருக்கு”ன்னார். தேங்க்ஸ் சொல்லிட்டு கெளம்பினோம்.
மொத தெருல இருந்த
கடையில அந்த தெருல இருக்கவங்க டீடைல்ஸ் இருந்துச்சு. மெனக்கெட்டு பக்கம்
பக்கமா பாத்துட்டு, “இந்த தெருவில இல்லீங்க தம்பி. அடுத்த தெரு கடையில போய்
கேளுங்க”ன்னார்.
பெரிய கஷ்டமா
இருக்காதுன்னு நெனச்சுக்கிட்டு அடுத்த கடைக்கு போனோம். ரெண்டு கஸ்டமர வெயிட் பண்ண
வச்சு எல்லா பக்கத்தயும் பாத்துட்டு கடை “இந்த தெருவில இல்லீங்க தம்பி. அடுத்த
கடையில போய் கேளுங்க”ன்னார்.
அடுத்த தெரு கடைல
அட்ரஸ் லிஸ்ட் சிறிசா இருந்துச்சு. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் போலன்னு
நெனச்சுக்குட்டு அடுத்த கடைக்கு போனோம். அங்கேயும் இதே கதை தான்.
காலனில இருக்க எல்லா கடைக்கும் போயாச்சு எங்கேயும் நாங்க கேட்ட
அட்ரஸ் தெரியல. ஒரு மூணு மணி நேரமா சுத்திட்டோம். வெயில் அதிகமா இருந்ததால
வேர்த்துக் கொட்டி மயக்கமா வந்துச்சு.
மணி அப்ப மதியானம் 3.
சாப்பிடவும் இல்ல. சுத்தி சுத்தி திரும்ப போஸ்ட் ஆஃபிஸுக்கே வந்துட்டோம். உள்ள
போய் கேக்கலாமுன்னு தோணுச்சு. உள்ள
நுழையும் போது டெலிவரி முடிச்சுட்டு வந்த ஒரு போஸ்ட் மேன்ட்ட வாசலில் வச்சு கேட்டோம். வாங்கி பாத்ததுமே “இது
தாப்பா நீங்க தேடி வந்த வீடு”ன்னு நேர் எதிர்த்த வீட்டைக் காட்டிட்டு கூலா உள்ள போயிட்டாரு.
எப்படி
இருந்திருக்கும் எங்களுக்கு? மொதல்ல பாத்த
அந்த ஆர்வக்கோளாறு ஆள தேடி நல்லா நாலு வார்த்தை கேக்கணும் போல இருந்துச்சு.
எங்கோயோ கேட்ட ஒரு ஜோக் இப்ப கொசுறா ஞாபகத்து வருது.
ஒரு வயசான அம்மா துண்டு பேப்பர வச்சிக்கிட்டு
ஒரு அட்ரஸ தேடி பாவம் ரொம்ப நேரமா அலஞ்சிருக்கு.
கடைசியா
ஒருத்தர் “இதுல என்னா எழுதியிருக்குன்னு
தெரியல பாட்டி அதுவும் இங்கிலீஷ்ல வேற இருக்கு. நீ ஒண்ணு செய், எதுத்தாப்புல
ஆஸ்பத்திரி இருக்கு. அங்க வெள்ள கோட் போட்டு கண்ணாடி கதவுக்கு பின்னாடி ஒரு ஆள் இருப்பாரு. அவரு தான்
டாக்டர் கிறுக்கினதெல்லாம் கரெக்ட்டா படிப்பாரு. அவருட்ட போய் கேளு”ன்னாராம்.
அத கேட்டு உள்ள போன
கெழவிட்ட அந்த வெள்ள கோட் துண்டு பேப்பர வாங்கிட்டு த.அ போட்ட ரெண்டு வெள்ள
மாத்திரய கொடுத்தாராம்.
அலைஞ்சாலும், தொலைஞ்சாலும் நல்ல வேளை உனக்கு அட்மிஷன் கிடைச்சிருச்சு.இல்லைனா நான் எப்படி படிச்சிருக்க முடியும் நீ இல்லாம?
ReplyDeleteஎன்னா ஒரு தன்னடக்கம்! நீ முதுகலை சோசியல் சையன்ஸ் படிக்காட்டி என்னோட எதிர்காலமே இருண்டு போயிருக்கும்ல!
ReplyDelete